சென்னை:சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று(ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகர், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் விசாரணை தொடங்காத நிலையில் அமலாக்க துறை வழக்கில் எப்படி விசாரணை தொடங்க முடியும்? என அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்கும் வரை குற்றச்சாட்டுப் பதிவை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கும், குற்றச்சாட்டுப் பதிவுக்கும் தொடர்பில்லை எனக் கூறினார். இதையடுத்து, செந்தில் பாலாஜியை ஏன் நேரில் ஆஜர்ப்படுத்தவில்லை என புழல் சிறை நிர்வாகத்திடம் தொலைபேசி வாயிலாக நீதிபதி எஸ்.அல்லி கேள்வி எழுப்பினார்.
அதற்கு செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஆஜர்படுத்த இயலவில்லை என சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காணொலி காட்சி மூலம் ஏன் குற்றச்சாட்டுப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத் துறையிடம் கருத்தை கேட்டார். அமலாக்கத் துறை சார்பில் இதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.