திருவண்ணாமலை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்குச்சாவடிக்கு நேரில் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் நேரில் சென்று வாக்கு அளிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மொத்தம் 31 ஆயிரத்து 690 பேர் உள்ளனர். அதில், 3 ஆயிரத்து 844 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தபால் வாக்குகள் பெறப்பட்டன.
அதேபோல், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மொத்தம் 35 ஆயிரத்து 544 பேர் உள்ள நிலையில், அதில் 3 ஆயிரத்து 699 பேர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டன. அதன்படி, ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவிகாபுரம், அண்ணாநகர், மலையான்புரவடை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களை நேரில் சந்தித்து இன்று தபால் வாக்குகள் பெற்றனர்.
மத்திய அரசுப் பணியில் ஈடுபடும் ஊழியர் உதவியுடன் வாக்குப்பதிவு மைய அலுவலர், வாக்குச்சாவடி மைய உதவியாளர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மூத்த குடிமக்களைச் சந்தித்து, அஞ்சல் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் குழு வாகனங்களில் சென்று அஞ்சல் வாக்கு பதிவு செய்து, அதை வாக்கு பெட்டகத்தில் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: பணப்பட்டுவாடா புகார்: தேனி அதிமுக, திமுக உறுப்பினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை! - LOK SABHA ELECTION 2024