சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்திரா காந்தி பற்றியும் தமிழ்நாட்டு காங்கிரஸ் பற்றியும் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு தெரியாது என்று அண்ணாமலை சொல்கிறார். அனைத்து அரசியலையும் படித்துவிட்டு தான் வந்துள்ளோம். நான் வாதம் செய்ய தயாராக உள்ளேன். உண்மையில் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் நான் காங்கிரஸ் பற்றி பேசுகிறேன் அவர் இந்து மகாசபை தெரிந்து பாஜக பற்றி பேச தயாராக உள்ளாரா?. முதலில் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர் இன்னும் கன்னடிகா மனநிலையில் உள்ளார். தமிழ் விரோத போக்குடன் உள்ளார்.நான் ஒரு தமிழனாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் கன்னட மக்களுக்கு தான் உதவி செய்வேன் என்கிறார்.
அண்ணாமலையின் ரகசியங்கள் வெளிவரும்: நான் ஆதாரத்தை வெளியிட்டால் அவர் அரசியல் பொதுவாழ்வில் இருந்து வெளியேறிக் கொள்வாரா? சிருங்கேரி மடத்தில் யார் தவம் இருந்தார், யார் உங்களை உருவாக்கினார் என்றெல்லாம் பேச வேண்டியிருக்கும். அவர் மகாத்மா காந்தி, அம்பேத்கர் என யாரை பற்றியும் படிக்கவில்லை. அடிமை என்ற வார்த்தை எஜமான் இடம் தான் வரும்" என அண்ணாமலையை செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்தார்.
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், “எந்த அடிப்படையில் அவரை மாநில தலைவராக்கினார்கள்? ஒரு வட்ட செயலாளராக கூட அவருக்கு தகுதி இல்லை. முதலமைச்சர் வெளிநாடு போவதற்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார். அதற்கு நான் சாட்சி; எவ்வளவு முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்லுவோம். இருந்த வேலைவாய்ப்பை ஒழித்தது பாஜக. தமிழக மக்கள் எவ்வளவு காலம் உங்களை நம்புவார்கள்” என்றார்.
அதனை தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படிப்புக்கு லண்டன் செல்ல இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அமெரிக்க அதிபராக முயற்சிக்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இனி பதிலடி தான்:பண்பு, இனிமை என்றால் என்ன என்று அண்ணாமலைக்கு சொல்லித் தருகிறோம். அருவருப்பான அகங்கார ஆணவ அரசியல் பேசினால் அண்ணாமலைக்கு தினமும் பதிலடி கொடுப்போம்” என்று செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.