புதுக்கோட்டை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு திடலில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய நடை பயிற்சியாளர் சங்கத்தினர், "இத்திடலுக்கு பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட விளையாட்டுத் திடலில், பல கோடி ரூபாய் மதிப்பில் இண்டோர் ஸ்டேடியம் கட்டப்பட்டு வந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், அந்த கட்டடம் இதுவரை கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. 2018ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த கட்டடம், இதுநாள் வரை கட்டி முடிக்கப்படவில்லை. மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
செல்வப்பெருந்தகை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "பாரத நாடு என்பது அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வரக்கூடிய நாடு. ஆனால், அப்படி இல்லாமல் ஒரு சாரார் கூடிய நாடாக மாற்றுவதற்காக பாஜக முயற்சி செய்கிறது. உச்சபட்சமாக ஆளுநர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட்டில், நேற்று பாஜக அமைப்பைச் சேர்ந்த ஏபிவிபி பெண் ஒருவரை நியமித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் ரூ.4,000 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. குடிமராமத்துப் பணிகளை பொறுத்தவரை, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மழை நேரத்தில் தான் அதை வேகப்படுத்துகிறது.
இதையும் படிங்க: "ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி" - விசாரணையின்போது வழக்கறிஞர் ஓட்டம்.. முற்றுகையிட்ட மக்கள்!
விஜய் அரசியல்: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரின் கட் அவுட் அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஒரு நல்ல தொடக்கம். விஜயின் ஆரம்பம் வரவேற்கத்தக்கது. ஆனால், விஜயின் நடவடிக்கைகள், அவருடைய பேச்சு, அவருடைய செயல்பாடு என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியும்.
கூட்டணி விவகாரம்: அதிமுகவை பாஜக அழித்து வருகிறது என்று தொடர்ந்து நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தான், எடப்பாடி வலதுகரமாக உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, பாஜகவின் வலதுகரமாக இருந்த ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஆகியவை நடந்துள்ளது. இனியாவது அதிமுக, ஓபிஎஸ் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா கூட்டணி என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து தான் செயல்பட்டு வருகிறது. வலிமையாக உள்ளது, அதை யாரும் பிரித்து விட முடியாது. இது ஒரு கொள்கை கூட்டணி. வெற்றிக்காக, தோல்விக்காகவோ இந்த கூட்டணி சேரவில்லை. தேசத்தின் பாதுகாப்பு முக்கியம் என்ற ரீதியில் தான் கொள்கையுடன் இந்தக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. பாசிச செயல்களை செய்து வரும் பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றிணைந்து தான் செயல்பட வேண்டும்.
கூட்டணிக்குள் சில பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் ஆகியவை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது கூட்டணி உடைவதற்குக் காரணமாக இருக்காது. இதனால் பிரிவினையை உருவாக்க முடியாது. அதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். யாரும் யாரையும் பலவீனப்படுத்த முடியாது. மக்கள் நினைத்தால் எந்த கட்சியையும் பலவீனப்படுத்த முடியும். யாரை பலப்படுத்த வேண்டும் யாரை பலவீனப்படுத்த வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும், மக்கள் கையில் தான் அது உள்ளது, மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.
பாஜக மீது குற்றச்சாட்டு: வயநாட்டில் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவது 5வது தலைமுறையாக வாரிசு அரசுகளை காங்கிரஸ் செய்கிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. இது வாரிசு அரசியல் கிடையாது, இந்த தேசத்திற்கு தேவையான அரசியல். இந்த குடும்பம் செய்தது போல், தியாகம் செய்தது போல் யாராவது செய்துள்ளனரா? தியாகம் என்றால் பாஜவும் என்னவென்று தெரியுமா?
அமலாக்கத்துறை தொடர்ந்து எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகப் பழி வாங்குவதற்காக இந்த துறையை மத்திய அரசு ஏவி வருகிறது. பாஜகவிற்கு அவர்கள் ஆதரவு அளித்தவுடன் அந்த வழக்கு நிலைமை என்னானது என்பது யாருக்கும் தெரியவில்லை.
தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தை அதன் உரிமையாளர் புகாரி இடம் அதானிக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள் என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் அவரை ஒன்றே ஆண்டு காலமாக தமிழாக்கத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து சிறையில் வைத்துள்ளது. இதுதான் தேசத்தின் பெருமையா?
நம் நாட்டில் போதைப்பொருள் எங்கு உருவாகிறது? வெளிநாட்டிலிருந்து தான் இந்தியாவுக்குள் வருகிறது. அப்படியானால், இந்தியாவில் இருக்கும் ராணுவம், கடற்படை ஆகியவை என்ன செய்கிறது. இந்த அமைப்புகள் அனைத்தும் வலிமையாக இருந்தும் போதைப் பொருள் இந்தியாவிற்கு வருகிறது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்