திருச்சி:மோடியும், அண்ணாமலையும் திருச்சியில் உப்புச் சத்தியாகிரகம் நடத்திய ராஜன் இல்லத்திற்கு வந்து, சசுதந்திரத்திற்கு போராடியவர்கள் பற்றியும், சுதந்திர வரலாற்றை பற்றியும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என திருச்சி உப்புச் சத்தியாகிரக நினைவிடத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவிடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று (ஏப்.13) நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “பிரிட்டிஷ் அரசாங்கம் உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து, 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரக யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் ராஜாஜி தலைமையில், வேதாரண்யம் வரை யாத்திரை நடந்தது, உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நாளில், சுதந்திர போராட்டத்தின் துவக்கமாக, மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த வரலாறு பா.ஜ.கவினருக்கும், மோடிக்கும், அண்ணாமலைக்கும் தெரியுமா?
ஜெனரல் டயர் நேரடியாக போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளினார், இன்று மறைமுகமாக அணுஅணுவாக இந்தியாவின் சிறுபான்மை மக்களையும், விளிம்பு நிலை மக்களையும் சுட்டுக் கொன்று வருகின்றனர். பெண்களுக்கு குழந்தைகளுக்க பாதுகாப்பு இல்லை, இந்தியாவில் சிறுபான்மை மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், விளிம்ப நிலை மக்கள் தாக்கப்படுகின்றனர், இது தான் பா.ஜ.க ஆட்சியின் 10 ஆண்டு கால லட்சணம்.
பாஜக, பிரித்தாலும் சூழ்ச்சியும் செய்ய முயற்சிக்கின்றனர்:இந்த உப்பு சத்தியாகிரகம் என்றால் என்ன எனவும், நாட்டுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகத்தை பற்றியும் மோடியும், அண்ணாமலையும் தமிழகத்துக்கு வரும் போது பேச வேண்டும். வட மாநிலங்களில் செய்து முடித்து விட்டு, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறது பாஜக, பிரித்தாலும் சூழ்ச்சியும் செய்ய முயற்சிக்கின்றனர். இதை ஒரு போதும் தமிழக மக்கள் ஏற்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழக மண்ணில் வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை, பிரிவினைவாதத்துக்கு இடம் இல்லை, சாதி மதம் பற்றி பேசி, துண்டாடும் பா.ஜ.கவிற்கும் இடம் இல்லை.
மோடியும், அண்ணாமலையும் திருச்சியில் உப்புச் சத்தியாகிரகம் நடத்திய ராஜன் இல்லத்திற்கு வந்து, சசுதந்திரத்திற்கு போராடியவர்கள் பற்றியும், சுதந்திர வரலாற்றை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தேசத்தை துண்டாடும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தையும் பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலையும், தமிழக மக்கள் தொடர்ந்து புறந்தள்ளி வருகின்றனர், இந்த தேர்தலிலும் புறந்தள்ளுவார்கள்”, என பேசினார்.