தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தஞ்சை கீழவாசல் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "தேர்தலில் ஜனநாயகம் வாழ வேண்டும் என்றால், சர்வாதிகாரம் வீழ வேண்டும், சர்வாதிகாரம் வீழ வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தமிழ்நாடு உரிமையை எடுத்துக் கொண்டவர் மோடி என்றால், தமிழ்நாடு உரிமையை எடுப்பதற்காக துணை போனவர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவும், பாஜகவும் தொடர்ந்து வஞ்சகமும், துரோகமும் செய்துவிட்டது. மாநில அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை இரண்டே ஆண்டுகளில் 80 சதவீதம் நிறைவேற்றியவர். இந்த தேசத்தின் பிரதமர் என்றால், தேசத்தின் மக்களுக்காக பணியாற்ற வேண்டும், அதைத்தான் காங்கிரஸ் பிரதமர்கள் செய்தார்கள், ஆனால் நீங்கள் (மோடி) அதானிக்கும், அம்பானிக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு கொண்டு வரவில்லை, உதய் மின் திட்டம் கொண்டு வரவில்லை, ஜிஎஸ்டியில் கையொப்பமிட மறுத்தார், பொது சிவில் சட்டம் கொண்டு வர அனுமதிக்கவில்லை, இப்படி எல்லாவற்றையும் எதிர்த்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டும் இடத்தில் எல்லாம் கையொப்பமிட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்து, மோடிக்கு கொடுத்துவிட்டார், இரண்டு பேரும் இரு துருவங்களாக நிற்கிறார்கள் என்று நாம் பார்க்க முடியாது. இருவரும் ஓர் அணி தான், இவருக்கு போட்டாலும் நோட்டா தான், அவருக்கு போட்டாலும் நோட்டா தான், தேவையில்லாத வாக்குகளாக போய்விடும்.
இந்த தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள் நாடகம் போட்டு நடித்துக் கொண்டு மக்களை சந்திக்கிறார்கள். இந்தத் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்குமான தேர்தல், சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும், ஜனநாயகத்தை மீட்டெடுத்து இந்த மண்ணை பாதுகாக்க வேண்டும். மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்று பேசினார்.
முன்னதாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “இந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மக்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக நடைபெற உள்ளதாகவும், பிரித்தாளும் கொள்கையை கையாளக்கூடிய பாஜகவை எதிர்க்கும் தேர்தலாகவும் இது அமையும். இந்த மண் சமூக விடுதலைக்கான மண், சமூக நீதிக்கான மண். ஆகவே, ஒருபோதும் இந்த தேர்தலில் இந்திய மக்கள் இப்படிப்பட்ட பாசிச சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் இந்த தேசத்தின் மீதான பார்வை என்பது வேறு, வாஜ்பையை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தந்தையாகவும், குருவாகவும், தேசத்தின் பாஜகவின் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள். மோடி ஏற்றுக் கொண்ட தலைவரான வாஜ்பாய், உலகத்தின் இரும்பு மனுஷன் என்று போற்றப்பட்ட இந்திரா காந்தியை துர்கா தேவி என்று கூறினார்.
துர்கா தேவிக்கு என்ன சக்தி இருக்கிறதோ, ஆளுமை இருக்கிறதோ அந்த சக்தியும், ஆளுமையும் இந்திரா காந்திக்கு இருப்பதாக கூறினார். அப்படி என்றால், தலைவர் வாஜ்பாய் சொன்னது தவறா அல்லது மோடி சொன்னது சரியா? இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டவர் இந்திரா காந்தி.
கச்சத்தீவை குறித்து பேசுபவர்கள் வெஜ் பேங்கை குறித்து ஏன் பேசவில்லை, ஏன் மறைக்க வேண்டும்? வெஜ் பேங்க் என்பது என்ன, அதை எதற்காக இந்திரா காந்தி இந்தியக் கடல் எல்லையில் கொண்டு சேர்த்தார். வெஜ் பேங்க் என்ற பகுதியில் என்னென்ன அபூர்வங்கள், கனிம வளங்கள் உள்ளது என்பது குறித்து இதுவரை மோடி பேசவில்லை. ஆனால், ஒன்றுமில்லாத கச்சத்தீவு குறித்து மட்டும் பேசி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்தியாவினுடைய எல்லையை விரிவுபடுத்தவும், வெஜ் பேங்க் மூலம் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள்.