கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வரும் கனிம வளங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் களியக்காவிளை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மண், மலையை வெட்டி துறைமுகம் சாலை போட்டு விட்டு வாழ்வதற்கு அடுத்து என்ன செய்ய போகிறீர்கள். நம் முன்னோர்கள் தமக்கு கார், வீடு கட்டி வைக்கவில்லை.
அதற்கு மாறாக மலை, ஆறு உள்ளிட்ட இயற்கையை பாதுகாத்து வைத்தார்கள். ஆனால் நாம் எதிர்கால தலைமுறைக்கு எதனை பாதுகாத்து வைக்க போகிறோம். மந்திர கோலால் மலையை வளர்ப்பதற்கு இது விட்டலாச்சாரியார் படம் இல்லை. ஒரு தடவை சூடு கண்ட பூனைக்கு இருக்கும் அறிவு கூட நமக்கு இல்லை. வாடகை வீட்டில் வாழ்ந்து விட்டு திரும்ப செல்லும் போது பத்திரமாக வீட்டை உரிமையாளருக்கு ஒப்படைப்பது போல், பூமியை நம் எதிர்கால தலைமுறையிடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.
தாயின் உறுப்புகளை விற்பனை செய்வது போல், பூமியிலிருந்து மண் மலைகளை வெட்டி விற்பவர்கள் தாயின் மாறில் இருந்து பால் குடிக்க வேண்டும், மாறாக ரத்தத்தை குடிக்க ஆசை பட கூடாது. உங்கள் சாமியையே தாங்கி நிற்பது இந்த பூமி தான் என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு முதுகெலும்பு இல்லையா என கேள்வி எழுப்பினார்