விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தலும், ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கையும் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிட உள்ளார். இது தொடர்பான வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் நாதக நிா்வாகிகள் கூட்டம் விக்கிரவாண்டியில் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது. இக்கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று, விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் கட்சியினா் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
அதைத் தொடா்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "கடந்த 2023ஆம் ஆண்டு மரக்காணத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை தடுத்திருக்கலாம். புயல், மழைக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசு கள்ளச்சாராய பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எச்சரித்திருக்க வேண்டும்.
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு எதற்கு ரூ.10 லட்சம்: அரசு நேரடியாக விற்றால் அது நல்ல சாராயம், வெளி நபர்கள் மறைமுகமாக விற்றால் அது கள்ளசாராயம். தான் செய்த தவறுகளை மறைப்பதற்காகவே கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு திமுக அரசு ரூ.10 லட்சம் அளித்துள்ளது. இது, கள்ளசாராயத்தை குடியுங்கள் என மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. அரசு தன்னுடைய தவறை மறைப்பதற்கே லஞ்சம் கொடுக்கிறது.
கமலின் கருத்துக்கு சீமானின் விமர்சனம்:இனி இன்சூரன்ஸ் எல்லாம் போட்டால் ரூ.2 லட்சம் ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், சாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என்கிற மனநிலையை, மக்களிடத்தில் இந்த நிவாரணம் உருவாக்கும். நடிகர் கமலை சிறு வயதிலிருந்தே நான் பார்த்து வருகிறேன். அவர் அடையாத உயரம் இல்லை. ஆனால், அவர் ஏன் "குடிக்காதே என்று சொல்ல முடியாது. குறைவாக மது அருந்துங்கள்" என்று அறிவுரை கூறினார் எனத் தெரியவில்லை. குடிக்கப் போகின்றவன், அளந்து பார்த்தா குடிப்பான் அல்லது அதனைப் படித்துக் கொண்டு இருப்பானா?