தூத்துக்குடி:ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸாவின் 155ஆவது பிறந்த நாள் தூத்துக்குடியில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் உள்ள குரூஸ் பர்னாந்திஸ் திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், “அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா நேரத்தில் தேவதை போல தெரிந்தவர்கள். அனைத்து மருத்துவர்களையும் குறை சொல்ல முடியாது. போதுமான மருத்துவர்கள் பணி நிரப்பப்படவில்லை. ஆகவே கூடுதல் பணி சுமை இது போன்று சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது. மருத்துவர்களை போல காவல்துறையிலும் பணி சுமை ஏற்படுகிறது. ஆகையால் இரண்டு பணிகளிலும் பாதுகாப்பு மிக முக்கியம்” என்றார்.
"போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் எளிதாகக் கிடைக்கிறது. முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள்கள் மிக எளிதில் கிடைக்கிறது. இதனால் சிறு பிள்ளைகள் கூட கர்ப்பமாகின்றனர்; ஏன் இப்படி நடக்கிறது என்றே ஆசிரியர்கள் புரியாமல் நிற்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் போதைப் பொருள் தான். இந்த நிலையில் மாநில அரசு மத்திய அரசுக்கு போதைப்பொருளை தடுக்க கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது”.