ஈரோடு: ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சீமான், “தமிழ் பேரின மக்களிடையே தொடர்ந்து அநீதி, முறையற்ற லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவை சுரண்டப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக சகித்துக் கொள்வதன் மூலம் அடிமை இனம் உருவாகி வருகிறது. இவர்கள் ஆட்சியின் அக்கிரமத்தை சகிக்க முடியாமல் எளிய பிள்ளைகள் நாங்கள் எதிர்க்கத் துணிந்தோம்.
உண்மையும், நேர்மையும் எங்கே இருக்கிறதோ அங்கே போய் சேரலாம். அதனால் தான் கூட்டணி வைக்கவில்லை. ஊழல், லஞ்சம் ஆகியவற்றை ஒழிப்பதற்கு முன்பு இவர்களை ஒழிக்க வேண்டும். தெரு தெருவாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறோம்.
ஆனால், மற்ற கட்சிகள் வீடு வீடாகச் சென்று வாக்குக்கு காசு கொடுக்கிறார்கள். இதனை மக்கள் புறக்கணிக்கும் போது தான் தமிழ் மக்கள் வாழ்க்கை உயரும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் அரசு வேலை என்பது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை.
பட்டு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு போன்ற வேளாண்மை பணிகள் அரசுப் பணிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை சும்மா இருக்கத் தான் காசு. இந்தியாவில் 28 சதவீதம் பேர் இரவு உணவு இல்லாமல் தூங்கச் செல்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சிக் கொள்கைகள் சொல்வதை, கேரள அரசு பின்பற்றி வருகிறது. மனிதன் உடல் திறனை உற்பத்தியில் முழுமையாக ஈடுபடுத்தும் நாடு தான் வளரும். தீரன் சின்னமலை உலகில் மிகப்பெரிய புரட்சியாளராக திகழ்ந்தவர். தீரன் சின்னமலை ஒரு எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மன்னர் வழியில் வந்தவர் இல்லை. உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு காசு கொடுத்து கூட்டம் வரவழைக்கப்பட்டு வருகிறது. 3வது அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி வந்ததற்கு, மக்களாகிய உங்கள் ஆதரவு தான். எதற்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று ஒரு காரணம் சொல்லுங்கள் பார்ப்போம்.
தமிழ்நாடு என்று பெயர் உள்ளது. ஆனால், தமிழில் எந்த பெயரும் இல்லை. விவசாய தொழிலில் வட இந்தியத் தொழிலாளர்கள் வேலைக்குக் கிடைப்பார்கள் என்று பலகை வைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகள் மூடி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தமிழ் நிலம் பறிபோய் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர்கள் வேலை செய்வது தவறு இல்லை. குடியுரிமை வழங்குவதைத் தான் எதிர்க்கிறோம். தமிழகத்தில் 90 சதவீதம் குற்றம் மது போதையில் தான் நடக்கின்றது.
அதானி துறைமுகத்தில் 1லட்சத்து 30ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டது. என்ன செய்தீர்கள்? ஏன் ஜாபர் சாதிக் மற்றும் அமீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கிறது? ஏனென்றால் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் தான் நடவடிக்கை எடுக்கிறது. ஏன் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
உலகத்தில் மாட்டிறைச்சி 76 லட்சம் டன் எடை வரை இந்தியா, முஸ்லீம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. பாரத மாதாவுக்கு ஜே போடட்டும். என் நாடு பைந்தமிழர் நாடு என முழக்கம் போடுவேன். அன்னல் அம்பேத்கர், மதம், சாதி, கடவுளைப் பற்றிச் சிந்திப்பவன் மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தேர்தலுக்காக ராமர் கோயில் அவசர கதியில் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் ஒரே ஒருமுறை ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள வட இந்தியர்களுக்கு பாஜக உறுதுணையாக இருக்கிறது. ஏனென்றால் வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வேட்பாளர்கள். தமிழகத்தில் பிரதமர் வரும்போது எல்லாம் கூட்டம் கூடுவது வட இந்தியர்கள் தான்.
இதையும் படிங்க:நயினார் நாகேந்திரன் வாகனத்தில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படையினர்! - Lok Sabha Election 2024