மதுரை:இரு நாள் பயணமாக இன்று (பிப்.27) தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் 2.45 மணியளவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, சிறப்புரை ஆற்ற உள்ளார். அதன் பிறகு, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வரும் மோடி, மாலை 5.15 மணியளவில் மதுரை - சிவகங்கை சாலையில், கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நடத்துகிறார். மேலும், டிவிஎஸ் நிறுவனம் சார்ந்த இரண்டு நிகழ்வுகளையும் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிறகு, அங்கிருந்து பசுமலை அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார். மேலும் பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு மீண்டும் தங்கும் விடுதிக்குச் செல்லும் பிரதமர் மோடி, இன்றிரவு இங்கேயே தங்கவுள்ளார். அப்போது, தமிழக பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.