கடலூர்: கடலூர் மாவட்டம், சி.என்.பாளையத்தில் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் ஸ்ரீ சொக்கநாதர் மற்றும் ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி, அர்த்தம் மண்டபம் பகுதியில் கருங்கற்காளால் தரை அமைக்கும் பணியில் கருங்கற்கள் அகற்றப்பட்டபோது, கோயிலில் சுரங்கம் போன்ற அமைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சுரங்க அமைப்பு பல ஆண்டுகளாக மூடிக் கிடந்ததால் ஆபத்து ஏதேனும் இருக்கும் எனக் கருதி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் உத்தரவின் பேரில், தொல்லியல் ஆலோசகர், மண்டல ஸ்தபதி மற்றும் கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் சுரங்க அமைப்பை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க:சேதுபதி மன்னர் கட்டிய கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
அப்போது, சுமார் 10 அடி அகலம் கொண்ட பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாதாள அறை என்பது கோயிலுக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். மேலும், இதே பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ள புஷ்பகிரி மலை ஆண்டவர் திருக்கோயிலில் பாதாள அறையில் பல்வேறு ஐம்பொன் மற்றும் கரங்கள் சிலைகள் மற்றும் விலை உயர்ந்த மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதே போன்ற பாதாள அறைகள் அரியலூர் மற்றும் தலைவாசல் போன்ற பகுதியில் உள்ள கோயில்களிலும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.