இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் சென்னை:தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.
2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாய் என உள்ளது. மேலும் ஒரே பணி - ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதைக் களையக் கோரிக் கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்திய போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச்செய்தார். புதிய அரசு பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023ஆம் புத்தாண்டின் முதல் அறிவிப்பாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நேற்று முதல் கடந்த 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 4வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். அப்போது இடைநிலை பதிவு மூப்பு இயக்கப் பொதுச்செயலாளர் ராபர்ட் நடு ரோட்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர், பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ஆசியர்களை 2 மணி நேரம் கழித்து பின்னர் மண்டபத்தில் அடைத்து வைத்தாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனையடுத்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்குக் காவல்துறை உணவு அளித்தனர். ஆனால் காவல்துறை அளித்த உணவைப் புறக்கணித்த ஆசிரியர்கள், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:"காடு என்றால் காடுதான்"-கொட்டு வைத்த உச்சநீதிமன்றம்: 1996ல் நீலகிரி வழக்கில் நடந்தது என்ன?