சம வேலைக்குச் சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 8வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! வேலூர்: சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கிய அவர்களது போராட்டம் 8வது நாளாக இன்று (பிப்.26) நீடித்து வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில், வரிசை எண் 311ல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை இடம் பெற்றிருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப முதலமைச்சர் ஆணையிட்டார்.
அதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மீண்டும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் போராட்டம் தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 8வது நாளாக இன்று (பிப்.26) போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஆசிரியர்களைக் கைது செய்வதைக் கண்டித்தும், சம வேலைக்குச் சம ஊதியம் 311 என்ற அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'காங்கிரஸில் இருந்து வெளியேற காரணம் இதுதான்..!' - உண்மையை கூறிய விஜயதாரணி