சென்னை:மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டிருந்த திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினர், அண்ணா அறிவாலயத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் அசோக் நகரில் நடைபெற்று வந்தது. அந்த கூட்டத்திற்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென 12.10 மணிக்கு, திமுக பேச்சுவார்த்தை குழுவினர் அறிவாலயத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்காக இரண்டு முறை திமுக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று (மார்ச் 2) மூன்றாவது முறையாக அழைத்தும் அண்ணா அறிவாலயம் வருகை தராததால், திமுக - விடுதலை சிறுத்தைகள் இடையேயான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்திருக்கிறது.