கின்னூர்: கடந்த பிப்ரவரி 4 அன்று, இமாச்சலப் பிரதேச மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் பங்கி நாலாவின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 5-இல் இருக்கும் சட்லஜ் நதியில் ஒரு கார் ஒன்று விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பயணித்து உள்ளனர்.
இந்த இருவரில் ஒருவர், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஆவார். இதனையடுத்து, இந்த விபத்தில் சிக்கிய உள்ளூர் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். அதேநேரம், வெற்றி துரைசாமி உடன் சென்ற கோபிநாத் என்பவர் காயங்கள் உடன் மீட்கப்பட்டு, தற்போது சிம்லாவில் உள்ள ஐஜிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, வெற்றி துரைசாமியைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அந்த வகையில், நேற்று கன்னூரை அடைந்த கப்பற்படையின் சிறப்பு குழுவினர், வெற்றி துரைசாமியைத் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு தேடுதல் பணியில் இறங்கி உள்ள மீட்புக் குழுவானது, போவாரி அருகே உள்ள நீர்மின் திட்டம் சுரங்கம் அருகே வலை அமைத்துள்ளது.