சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த 4 மாவட்டங்களில் மாநிலப் பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது என்று மாநில பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
இதில், ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில், 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். அந்த வகையில், திருநெல்வேலியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள், கன்னியாகுமரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள், நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் மற்றும் கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினர், அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் படிம் அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்று மாநில பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், இன்று (மே 17), நாளை (மே 18), நாளை மறுநாள் (மே 19) மற்றும் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.