சென்னை:அரசுப் பள்ளிகளில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கும் பாதுகாவலர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்த ஆசிரியர் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு இந்தச் சம்பவம் மிகப் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு உரிய சட்டப்படியான நிவாரணம் கொலையுண்ட ஆசிரியருக்கு வழங்க வேண்டும். அரசுப் பள்ளியில் பணியில் இருந்தபோது, அரசுப் பள்ளி வளாகத்தில் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு ஆசிரியர் இறந்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14ன் படி, அரசுப் பணியில் இருக்கும்போது உயிர் இழந்துள்ள ஆசிரியர், நிரந்தர ஊழியரா? அல்லது தற்கால ஊழியரா? என்ற பாகுபாடு பார்க்கப்படாமல், அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், இறந்த ஊழியருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் கிடைக்கக் கூடிய சட்டப் படியான அனைத்து உரிமைகளும் இறந்த ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டும்.