மதுரை:புத்தக வாசிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அனைவரும் புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடும் புத்தகத் திருவிழா தமிழக அரசின் உத்தரவின் படி அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு முதல் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில், புத்தகத் திருவிழா செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி வருகிற 16ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்த ஆசிரியர் பேட்டி (photo credits - ETV Bharat Tamil Nadu) கலை நிகழ்ச்சிகள்:இந்த புத்தகத் திருவிழாவில் முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புத்தகத் திருவிழா நடக்கும் ஒவ்வொரு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், நூல் வெளியீடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் வருகை: புத்தகத் திருவிழாவைக் காண நாள்தோறும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமன்றி, தனியார் பள்ளி மாணவ, மாணவியரும் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர். பள்ளி குழந்தைகளை புத்தகத் திருவிழாக்களில் அனுமதிப்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், ஆசிரியர்களும், பதிப்பாளர்களும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்பது அவர்களிடம் புதிய தேடலை உருவாக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:கருப்புசாமி பாடல் கேட்டு சாமி ஆடிய பள்ளி மாணவிகள் - மதுரை புத்தக திருவிழாவில் பரபரப்பு!
இந்நிலையில், மதுரை புத்தகத் திருவிழாவிற்கு மேலூரில் உள்ள அரசு உதவி பெறும் மீனாட்சி உயர்நிலைப் பள்ளியிலிருந்து 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் வந்துள்ளனர். இது குறித்து அப்பள்ளியின் ஆசிரியர் கிருஷ்ணவேணி கூறுகையில், “கிராமப்புற மாணவர்களுக்கு புத்தகத் திருவிழாக்களும், பதிப்பக முயற்சிகளும் மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. புத்தகங்களை வாசிப்பது குறித்து நாம் வாய்மொழியாக சொல்லிக் கொடுக்கும் நிலையில், அதனை கண்கூடாக காண்பதற்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
எழுத்தாளர் சிங்காரம்: மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு புத்தகத் திருவிழாக்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக, பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'புயலிலே ஒரு தோணி' என்ற ஒரு பாடம் உள்ளது. அதை எழுதியவர் சிங்காரம். இந்நிலையில், புத்தகத் திருவிழாவில் அவர் எழுதிய முழு நூலை பார்க்கும்போது மாணவர்களுக்கு எழுத்தாளர் சிங்காரம் மீதான புரிந்துணர்வு மேம்படுகிறது.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார்:பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை திரைப்படப் பாடல் ஆசிரியராக பார்க்கின்ற மாணவர்களுக்கு, இங்கு அவர் எழுதிய பல்வேறு நூல்களை பார்க்கும்போது அவர் குறித்த புரிந்துணர்வில் புதிய தேடல் உருவாகிறது. இதனால் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. ஒரு நல்ல நூல் நூறு நண்பர்களுக்கு சமம் என்ற அப்துல் கலாமின் வாசகம் நிஜமாக வேண்டுமானால், குழந்தைகளுக்கு புத்தகத் திருவிழாவின் அவசியத்தை நாம் உணர்த்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாரதி புத்தகாலயம் பதிப்பக ஊழியர் மோகனசுந்தரம் கூறுகையில், “நாள்தோறும் காலை 10 மணி தொடங்கி 2 மணி வரை பள்ளி குழந்தைகளின் பங்கேற்பு இங்கு உள்ளது. அடுத்த தலைமுறை அறிவு சார்ந்தவர்களாக உருவாக வேண்டுமெனில், இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களில் மாணவ, மாணவியரின் பங்கேற்பை அதிகப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு என்று தனி அரங்கு ஏற்படுத்த வேண்டும். பெரியோர்களுக்கான நூல்களையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவ, மாணவியர் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க அறிவுறுத்துவதை வரவேற்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.