மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைந்துள்ள மாநாட்டு மைய வளாகத்திற்குள் நேற்று துவங்கிய புத்தகத் திருவிழா செப்டம்பர் 16ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமியாடும் வீடியோ (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில் நேற்று துவக்க விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்தம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர்களும், பிரமுகர்களும் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்துச் சென்ற பின், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் நாட்டுப்புற பக்தி பாடல் ஒன்றுக்கு மேடை நடனக் கலைஞர்கள் கருப்பசாமி வேடமிட்டு ஆடிக் கொண்டிருந்தனர். மேலும், அந்த வேடத்தோடு மேடையை விட்டு கீழே இறங்கி வந்து நடனக் கலைஞர்கள் ஆடத் தொடங்கினர்.
அச்சமயம் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த கல்லூரி மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் சிலர் சாமி அருள் வந்து ஆடத் தொடங்கினர். அதனால், அருகில் இருந்த சக மாணவியர் மாணவிகளை கட்டுப்படுத்த முனைந்தனர். இந்நிலையில் 5க்கும் மேற்பட்ட மாணவியர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இதனால், புத்தகத் திருவிழா நடைபெறும் அரங்கத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அப்போது, நிகழ்ச்சிக்காக வந்திருந்த பொதுமக்களும், மற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் விழா ஏற்பாட்டாளர்களைக் குற்றம் சாட்டினர். தற்போது அரசு நிகழ்ச்சிகளில் இதுபோன்று மதம் சார்ந்த பாடல்களை அனுமதிப்பது மிகத் தவறான போக்காகும் எனவும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கருத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. போதுமான ஏற்பாடுகளைச் செய்து கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விழுப்புரம் காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கு பதில் ரெடி; த.வெ.க. விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி எப்போது?