சென்னை: நாட்டில் ஜனநாயக திருவிழாவாகக் கருதப்படும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் தேர்தல் அறிக்கையையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாணவர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை அமையப்பெற்றிருந்தது. இதில் பங்கேற்ற கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், பேசிய கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவர், குழந்தைகளுக்கான கல்விக்கு அளிக்கப்படும் நிதியை உயர்த்த வேண்டும், குழந்தைகளுக்கு என தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், பள்ளி அல்லது அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளில் குழந்தைகள் மாணவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். பள்ளிகளில் பாதுகாப்பு வசதி செய்து தரப்பட வேண்டும். தாய்மொழியை அனைவரும் கற்க வழி செய்ய வேண்டும்.
எங்களது கோரிக்கை எல்லாம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் கோரிக்கைகளை முன் வைத்துப் பேசிய மதுரையைச் சேர்ந்த 16 வயது மாணவன், பள்ளியைச் சுற்றி போதைப் பொருட்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிகளைச் சுற்றி உள்ள பெட்டிக்கடையில் போதைப் பொருட்கள் கிடைக்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் முழுவதும் போதைப் பொருட்கள் நிரம்பி இருக்கிறது.
5 மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட அதன் பாதிப்பு தெரியாமல் கூல் லிப் என்று சொல்லக் கூடிய போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இதனைத் தடுக்க அரசுப் பள்ளிகளைச் சுற்றி உள்ள பெட்டிக்கடைகளைச் சோதனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மதுரையில் உள்ள ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளைச் சுற்றி உள்ள பெட்டிக் கடைகள் மட்டுமல்லாது, டீ கடைகளிலும் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டினார்.