சென்னை:தமிழக பள்ளிக்கல்வித்துறையின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் விருட்சா நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள கம்ப்யூட்டர் ஆய்வகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கணினி ஆய்வகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
மேலும் லீடர் இன் மீ ( Leader in Me) என்ற பயிற்சி திட்டத்தையும் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறோம். கார்ப்பரேட் சமூக பொறுப்பு அல்லது சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் 3 பள்ளிக்கூடங்களுக்கு 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் ஆய்வகத்தை திறந்து வைத்துள்ளோம்.
கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் திட்டத்தை, மற்றவர்களுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த நிதி 5 லட்சம் கொடுத்து துவக்கி வைத்தார். அவர் துவக்கி வைத்த திட்டத்தின் மூலம் இன்றைக்கு 380 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கு அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கை தான் காரணம். நாம் எல்லாரும் சமமாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் கல்வி தான்.
அதனை வெளிப்படைத்தன்மையுடன் செலவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் வேலையை தேடி அலைந்த காலக்கட்டங்களும் உண்டு. கல்வி சமுதாயத்தை வளர்ச்சி அடைய செய்யும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறுவார். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் உதவிட வருகின்றனர். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.