சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் 50வது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், அவரது ரசிகர்கள் சார்பில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அதில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், சிறுவர்கள் சாகசம் மேளதாளங்கள் என வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இந்த நிலையில், சிறுவர்கள் சாகசம் செய்யும் பொழுது கையில் பெட்ரோல் ஊற்றி எரிய வைத்து ஓடுகள் உடைப்பது உள்ளிட்ட சாகசங்கள் செய்தனர். அப்போது சிறுவன் ஒருவர் கையில் பற்ற வைத்த தீ, ஓடு உடைத்த பின் அணைக்க முடியாமல் அதிகளவு எறியத் தொடங்கியது. இதனால் அலறியடித்த சிறுவன் கையை உதறிய பொழுது அவர் அருகில் பெட்ரோல் வைத்திருந்தவர் மீதும் தீ பற்றி எறிந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவர் கையிலும் பற்றிய தீயை விரைந்து அணைத்தனர். தற்போது சிறுவன் நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.