சென்னை:பட்டியலினத்தில் பின்தங்கி இருந்த அருந்ததியர் சமூகத்தினருக்கு, 2009ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு, உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாகச் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசியவர்,"உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களில் நடத்தியது. பட்டியலின மக்கள் சமூகத்திலேயே மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ள சமூகம் அருந்ததியர் சமூகம்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு தமிழ்நாட்டின் நீண்ட கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அருந்ததிய மக்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சாதனை. இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு ஏற்படுத்திய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரளாவில் வரலாறு காணாத சோகம் நடைபெற்றுள்ளது. எல்லா சக்திகளையும் திரட்டி வரலாறு காணாத சோகத்திலிருந்து கேரளா அரசு மீண்டு கொண்டு வருகிறது. தமிழக அரசு கேரள மக்களுக்குச் செய்து வரும் உதவிகளை நான் மனதார பாராட்டுகிறேன். நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்குத் தமிழக மீட்புப் படையினரை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றி.