புதுக்கோட்டை:யூடியூபர் சவுக்கு சங்கர் அலுவலகத்தில் பணிபுரிந்த கார்த்திக் என்பவர் மீது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு சொந்தப் பிணை வழங்கி நீதிபதி விஜயபாரதி உத்தரவிட்டுள்ளார்.
பிணை கிடைத்த சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றபோது "கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளது, தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது" என்று கோஷமிட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவரான கார்த்தி என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் போது கார்த்தி யூடியூபர் சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரையும் இரண்டாவது குற்றவாளியாக அறந்தாங்கி போலீசார் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி விஜயபாரதி, சவுக்கு சங்கருக்கு சொந்த பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.