சென்னை:தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது தற்போது 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகப்படியாகக் கள்ளக்குறிச்சியில் 75.67 % தர்மபுரி 75.44 % சிதம்பரம் 74.87% குறைந்த பட்ச வாக்குப்பதிவு சென்னை மத்திய 67.35 % சென்னை தெற்கு 67.82 % மதுரை 68.98 % சென்னை வடக்கு 69.26 % இதுவரை நடைபெற்ற தேர்தலில் தற்போது வந்துள்ள நிலவரம் நன்றாக உள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே நேரத்தில் 69 % வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக வாக்காளர் மத்தியம் 3 மணி முதல் 6 மணி வரையில் அதிகமாக வாக்களிக்க வந்தனர்.
இன்னும் பல வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். 9 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் கடைசி வாக்காளர்கள் இருக்கும் வரை வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் தற்போது கிடைத்துள்ள சதவீதத்தில் தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. சரியான விபரங்கள் நாளை காலை 12 மணிக்குத் தெரிவிக்கப்படும்.
தமிழகத்திற்கு உள்ளே உள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை பல இடங்களில் திரும்பப் பெறப்படவுள்ளது. தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் மட்டும் கண்காணிப்புப் பணிகள் நடைபெறும் குறிப்பாகக் கேரளா கர்நாடக மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் உள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு தொடர்ந்து சோதனையானது நடைபெறும்.