தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களின் கூடுதலாக ஒரு சிசிடிவி பொருத்த சத்ய பிரதா சாகு வலியுறுத்தல்! - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Sathya Pratha Sahoo: ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

சத்ய பிரதா சாகு புகைப்படம்
சத்ய பிரதா சாகு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 7:32 PM IST

Updated : May 9, 2024, 10:40 PM IST

சென்னை: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாகத் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (வியாழக்கிழமை) அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஸ்ட்ராங் ரூம் கதவுகளின் வெளிப்புறத்திலும் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் தடையில்லா மின்சாரம் பெறுவதை உறுதி செய்ய, மின்சாரத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார துண்டிப்பு ஏற்படும் போது, ஜெனரேட்டர்களை இயக்கும் இடைவெளியில் ஸ்ராங் ரூம் முன்பு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தடையின்றி செயல்பட அதற்கு யுபிஎஸ் (UPS) இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். அதேபோல், மின்னல் ஏற்பட்டு சிசிடிவி கேமராக்கள் பாதிப்படையாமல் இருக்க சர்க் ப்ரொடக்டர் அல்லது லைட்டிங் அரெஸ்டர் (Surge protector/lightning arrester) போன்ற தொழில்நுட்ப ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சரியான அங்கீகாரம் இல்லாத நபர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவதைத் தடுக்க வகையில், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களின் வளாகங்களில் மத்திய மற்றும் மாநில ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“நான் பட்டியலின பெண் என்பதால், என் பெயரை அழித்து விட்டார்கள்” - கடிச்சம்பாடி ஊராட்சிமன்ற தலைவர் புகார்!

Last Updated : May 9, 2024, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details