சென்னை:2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து "தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்" என்ற தலைப்பில் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி சென்னை கலங்கரை விளக்கத்தில் துவங்கப்பட்டது. இந்த மிதிவண்டி பேரணியானது இன்று(சனிக்கிழமை) சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலை கலங்கரை விளக்கத்திலிருந்து பல்லாவரம் அலுவலர் குடியிருப்பு வரை நடைபெற்றது.
கிட்டத்தட்ட 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியில், சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மிதிவண்டி பேரணியை, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கொடியசைத்துத் துவங்கி வைத்தார். மேலும் இந்த விழிப்புணர்வுப் பேரணி நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, "100 சதவீதம் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வு ஏற்படுவதற்காகத் தான், இந்த சைக்கிள் பேரணி நிகழ்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இளைஞரும் வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து தேர்தல் தேதியன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு மாறி, தனது பதவியை ராஜினாமா செய்த விஜயதாரணியின் தொகுதியான குமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் சொத்துகுவிப்பு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது. அதேவேளையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்டமாக 2 துணை ராணுவப் படை குழுக்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். கூடுதலாக மேலும் சில குழுக்கள் வர உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வதந்திகளை பரப்பக் கூடாது" - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை!