திருநெல்வேலி:தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டம் கடந்த 4 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பொதுவாக கிராமப்புறங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டி என்றாலே, விளையாட்டு வெறும் போட்டியாக மட்டுமல்லாமல் கலகலப்பான நகைச்சுவை கலந்த விளையாட்டாக இருக்கும். அப்படி தான் நெல்லை மாவட்டத்தில் ஒரு போட்டி நடந்து முடிந்துள்ளது. அது என்ன?
அதாவது, வித்தியாசமான முறையில் எதார்த்தமான விளையாட்டுகளை கிராமப்புறங்களில் நடத்துவார்கள். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் பகுதியில் மிகவும் வித்தியாசமான முறையில் விளையாட்டுப் போட்டி நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், பெண்கள் இளவட்டக்கல் தூக்கி சாதனை படைப்பது, கணவன் மனைவி வாயால் பந்தைக் கடித்துக் கொண்டு செல்வது என வித்தியாசமான போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வரிசையில் நேற்று இரவு தெற்கு வள்ளியூர் அருகே கணவர்களுக்கு மனைவிமார்கள் சேலை கட்டி விடும் நூதன போட்டி நடைபெற்றது. தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோயிலில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில், தங்களின் கணவர்களுக்கு அவரவர் மனைவிகள் சேலை கட்டி அழகு பார்க்கும் அழகிய போட்டி நடந்தது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.