தூத்துக்குடி:திருச்செந்தூர் சாலையில் தேங்கிய கழிவு நீரை நகராட்சி ஆணையர் முன்பு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் சுத்தப்படுத்தியது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சிறப்பு நிலை பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 27 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகராட்சியில், 82 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆன்மீக சுற்றுலா நகரமாக திருச்செந்தூரில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் கழிவு நீர் தேங்கியுள்ளது. அதனை தூய்மைப் பணியாளர்கள் கையுறை, காலுறை, முகக்கவசம் மற்றும் சுத்தப்படுத்தும் பிரத்யேக கருவிகள் ஏதும் இல்லாமல், நகராட்சி ஆணையர் முன்பாக வெறும் கைகளால் சுத்தப்படுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கழிவு நீரை அகற்ற அதிநவீன இயந்திரம் இருந்தும் பணியாளர்களை வெறும் கைகளால் ஈடுபட வைத்துள்ளதாகவும், எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணியில் ஈடுபட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திருச்செந்தூர் அருகே கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால், இது குறித்து நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையைக் கண்டித்து அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.