தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை தூய்மைப் பணியாளராக இருந்த ஆபிஸில் மகள் கமிஷனர்.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் சாதித்த திருவாரூர் பெண்! - sanitaryworker daughter pass group2

sanitary worker daughter to Municipality Commissioner: தாத்தா, அப்பா என வழிவழியாக அனைவரும் தூய்மை பணியாளராக பணியாற்றியவர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன் என கூறும் திருவாரூரை சேர்ந்த பெண் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று நகராட்சி ஆணையராக பதவிவகிக்க உள்ளார்.

தந்தை சேகர் உடன் துர்கா
தந்தை சேகர் உடன் துர்கா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 10:59 PM IST

திருவாரூர்:மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி செல்வி. இவர்களது ஒரே மகள் துர்கா. சேகர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.அவரது மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் சாதித்த தூய்மை பணியாளரின் மகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், மகள் துர்காவை அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்த சேகர் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2015ல் துர்காவை 21 வயதில் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நிர்மல் குமார் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நிர்மல் குமாருக்கும் துர்காவிற்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை லக்ஷிதா மூன்றாம் வகுப்பும் இரண்டாவது குழந்தை தீக்ஷிதா ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இந்த நிலையில்,கணவன் நிர்மல் குமார் துர்காவின் அரசு வேலைக் கனைவ அறிந்து அதற்கு உன்னை நீ தயார் செய்து கொள் என்று ஊக்கமளித்துள்ளார்.

இதனையடுத்து துர்கா கடந்த 2016ல் குரூப் 2 தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். தொடர்ந்து மனம் தளராமல் 2020ல் குரூப் ஒன் தேர்வு எழுதி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும், அடுத்தடுத்த இரண்டு குரூப் 4 தேர்வுகளையும் அவர் எழுதி கட் ஆப் இல்லாத காரணத்தினால் தேர்ச்சி பெற முடியாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில்,மீண்டும் கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 2024ல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 30க்கு 30 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று எஸ்பிசிஐடி ஆக பொறுப்பிற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இருப்பினும் சிறுவயதிலிருந்து துர்கா நகராட்சி ஆணையராக வேண்டும் என்று விரும்பி நகராட்சி ஆணையர் பொறுப்பை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி கடந்த ஜூன் மூன்றாம் தேதி அவருக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனது அப்பா தூய்மை பணியாளராக பணி புரிந்து பல சிரமங்களுக்கு நடுவில் என்னை படிக்க வைத்தார் எனக்கூறும் துர்கா, அதேபோன்று அம்மாவும் வீட்டு வேலைக்கு சென்று என்னை படிக்க வைத்தார்.

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த நான் அரசினர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2015 ல் திருமணம் செய்து கொண்டேன். தொடர்ந்து குரூப் 2, குரூப் 1, குரூப் 4 என பல தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த நிலையில், விடாமுயற்சியுடன் படித்து குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது நகராட்சி ஆணையராக பதவி ஏற்க உள்ளேன்.

நகராட்சி அலுவலகத்தில் அடித் தட்டில் தூய்மை பணியாளராக வேலை பார்த்த எனது அப்பா நான் நகராட்சி ஆணையராக வருவதை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் இப்போது எனது அப்பா உயிரோடு இல்லை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு சிறிய விபத்தில் அவர் இறந்துவிட்டார். இருந்தாலும் அப்பாவின் பெயர் என்றைக்கும் இருக்கும். கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும் எதுவாக இருந்தாலும் கல்விக்கு பின்னாடி தான்.

நான் எப்படி அடித்தட்டில் இருந்து எவ்வித குடும்ப பின்னணியும் இல்லாமல் இன்று ஒரு அதிகாரியாக எனது கல்வியால் உயர்ந்திருக்கிறேனோ அது போன்று எல்லோரும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் கண்டிப்பாக அரசு அதிகாரியாக ஆகலாம். எனது தாத்தா, அப்பா என வழிவழியாக அனைவரும் தூய்மை பணியாளராக பணியாற்றியவர்கள். அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்” என்றார்.

இதையும் படிங்க: தேசிய குத்துச்சண்டை போட்டி: நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை! - national boxing championship

ABOUT THE AUTHOR

...view details