நாமக்கல் : கேரள மாநிலம், திருச்சூரில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு தப்பி வருவதாக நாமக்கல் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட எல்லையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வெப்படையில் கண்டெய்னர் லாரி ஒன்று வாகனங்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்நிலையில், திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை பிடிக்க முற்பட்டனர். ஆனால், லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து போலீசார் சன்னியாசிபட்டி பகுதியில் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அருகே இருந்த நூற்பாலைக்கு கண்டெய்னர் லாரியைக் கொண்டு சென்று, அதனை திறந்து சோதனை செய்தபோது உள்ளே வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. போலீசாரைக் கண்டவுடன் அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்ததாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க :கேரளாவில் கொள்ளை.. தமிழ்நாட்டில் என்கவுண்டர்.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் லாரியில் கடத்தல்..!
அப்போது லாரியை ஓட்டி வந்த ஜாமலுதின் என்பவர் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணியை கத்தியால் குத்தியதாகவும், அதனைத் தடுக்க சென்ற காவலர் ரஞ்சித் குமாரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்காப்பிற்காக காவல் ஆய்வாளர் தவமணி ஜாமலுதினை சுட்டதில் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு நபர் அசார் அலி என்பவரும் போலீசாரை தாக்க முற்பட்டபோது அவரின் இரு கால்களிலும் காவல் ஆய்வாளர் தவமணி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீதமிருந்த 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் காவலர் ரஞ்சித் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், படுகாயமடைந்த அசார் அலியை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிடிப்பட்ட 5 பேரிடம் சேலம் சரக டிஐஜி உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மூலம் உடைத்து பணத்தை திருடி விட்டு கோவை வழியாக நாமக்கல் நோக்கி சென்றபோது பிடிப்பட்டார்கள் எனவும், எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் குறிவைத்து திருடும் கும்பல் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வெப்படை காவல் நிலையத்திற்கு கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட எஸ்பியும் வருகை தந்துள்ளதாகவும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை திருச்சூர் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்