சேலம்: விசாரணைக் குழுவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கொள்கை முடிவுகள் எடுப்பதை தடுக்க வேண்டும் என உயர் கல்வித்துறைக்கு, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் கூறுகையில், "துணைவேந்தர் ஜெகநாதன் தனது பணிக்காலத்தில் முன்னாள் பதிவாளர், கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த தங்கவேல் உள்ளிட்டோருடன் கூட்டு சேர்ந்து ஊழல் முறைகேடு, விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்தது.
அக்குழுவினரின் விசாரணைக்குப் பிறகு துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல், தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக விரிவான ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல், பெரியசாமி மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை விவரங்கள், இதுநாள் வரை ஆட்சிக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இது முழுக்க முழுக்க துணைவேந்தரின் அதிகார அத்துமீறலாகும்.
ஐஏஎஸ் அதிகாரி பழனிசாமி குழுவின் அறிக்கையின்படி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட முன்னாள் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. ஆனால், துணைவேந்தர் அரசின் அந்த கடிதங்களை புறந்தள்ளி தங்கவேலுக்கு பணி ஓய்வு அளித்து, ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இது முழுக்க முழுக்க விதிமீறல் மட்டுமல்ல, அதிகார அத்துமீறலும் ஆகும். எனவே, முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது அரசு அறிக்கையின்படி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 20 நாட்களில் பணிக்காலம் முடிய உள்ள துணைவேந்தர் ஜெகநாதன், எந்த வகையிலும் கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதனை ஆட்சிக் குழுவிற்கு அறிவுறுத்த வேண்டும்.
பெரியார் பல்கலைக்கழக சாசன விதிப்படி, ஆட்சிக்குழு அதிகாரம் படைத்த அமைப்பு ஆகும். துணைவேந்தருக்கு என தனி அதிகாரம் எதுவும் கிடையாது. எனவே, ஆட்சிக் குழுவை மதிக்காமல் தொடர்ந்து விதிமீறலிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டு வரும் துணைவேந்தரின் நடவடிக்கைகளை ஆட்சிக்குழு கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், அவர் பணி நீட்டிப்பு பெற முயன்று வருவதாகவும் அறிகிறோம். ஊழல் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகத்தால் பல்கலைக்கழகத்தை நாசமாக்கிய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரை வலியுறுத்தி கடிதம் எழுத வேண்டும் எனவும் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பள்ளிகளில் ஆதார் பதிவு முகாம்; நேரில் பார்வையிட்ட சேலம் மாவட்ட ஆட்சியர்!