சேலம்:காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கடந்த ஜூலை 3ஆம் தேதி 39.65 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கி, ஜூலை 27ஆம் தேதி 100 அடியை எட்டியது. தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த ஜூலை 30ஆம் தேதி முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
பின்னர், டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டதால் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 89.26 அடியாக சரிந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், மேட்டூர் அணையில் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 17 ஆயிரத்து 586 கனடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 29 ஆயிரத்து 29 கன அடியாக உயர்ந்ததுள்ளது. நேற்று முன்தினம் 98.56 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 86 நாட்களுக்குப் பின் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நேற்று காலை 100.01 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7 ஆயிரத்து 500 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.