சேலம்: சீனாவின் வடக்கு மாகாணங்களில் பருவகால காய்ச்சல், rhinovirus, RSV மற்றும் HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் பரவி வருகிறது. HMPV வைரஸ் சீனாவில் பரவுவதாக செய்திகளில் வெளிவந்த நாளிலேயே உலக நாடுகளை பீதியாக்கியது.
குறிப்பாக, இந்தியாவில் தினம் தினம் அதுகுறித்து சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் தகவல் பரிமாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிலும் தடம் பதித்த HMPV வைரஸ் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத்தில் பாதிப்பை துவக்கியுள்ளது. சேலம் மற்றும் சென்னையில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், பொது இடங்களில் முககவசம் அணிவதன் மூலம் HMPV வைரஸ் மட்டுமின்றி அனைத்து வகை சுவாச மண்டல நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம் என சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கோட்டூர்புரத்தில் 26 இடங்கள் ஆக்கிரமிப்பு.. கோவில் நிலத்தில் ஞானசேகரன் வீடு.. சோதனையில் பகீர் திருப்பம்..!
செய்தியாளர்களை சந்தித்த சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களே இந்த வைரசால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சளி, உடல் சோர்வு, காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படுவதாகவும், இந்த வைரசால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது, ஆனால் ஆஸ்துமா போன்ற இணை நோய்கள் உருவானால்தான் வைரஸின் பாதிப்பு அதிகமாக கூடும் என தெரிவித்தார்.
மேலும் அவர், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் அனைத்து வகை சுவாச மண்டல நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம், கை சானிடைசரை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலமும், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலமும் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக தப்பிக்கலாம் எனக்கூறினார்.
இதற்கிடையே உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் HMPV வைரஸ் குறித்த எந்தவித அசாதாரண அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை. கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி வரை சீனாவில் பருவக்காய்ச்சலுடன் சேர்ந்து எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாகவே உள்ளது என அதில் தெரிவித்துள்ளது.