சேலம்:இரண்டு முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்து அதை வேட்பு மனுவில் மறைத்ததாக, சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மீது புகார் எழுந்து நிலையில், அவரது வழக்கறிஞர்களின் விளக்கத்திற்கு பிறகு, இன்று (மார்ச் 28) மனு ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15வது சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, இரண்டு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததால், அவரது வேட்பு மனு நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் சார்பில் வழக்கறிஞர் விடுதலை மற்றும் வழக்கறிஞர்கள் குழு நேரடியாக தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குச் சென்று, உரிய விளக்கங்களைக் கொடுத்து, எழுத்துப்பூர்வமான விளக்கங்களையும் சமர்ப்பித்தது.
இதனை அடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி, சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் மனுவை ஏற்றுக் கொண்டதாக அவரது வழக்கறிஞர் விடுதலை, செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.