சேலம்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (மார்ச்.25) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவியிடம் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். திமுக சார்பில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி எம் செல்வகணபதி தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவருடன் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் சேலம் எம்பி எஸ் ஆர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகச் செல்வகணபதியின் வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் விசாரித்து அவரது மனுவைப் பெற்றுக் கொண்டார். முன்னதாக, சேலம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள விக்னேஷ் தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார் .
அவருடன் சேலம் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டு உடன் இருந்தனர்.அதேபோல இன்று இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். சேலத்தில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்சென்னை வேட்புமனு தாக்கலின் பொது தமிழிசை மற்றும் தமிழச்சி சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம்! - Tamilisai Filed Nomination