சேலம்: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, ஜூன் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 10ஆம் தேதியாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
மேலும், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவு செய்தல் மற்றும் பதிவை மேம்படுத்தல் போன்ற பணிகள் பள்ளி திறக்கும் நாள் முதல் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சேலம் மணக்காடு காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, “கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவிகள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு பயணிக்க வேண்டிய நிலையினை தவிர்த்து, தாம் பயிலும் பள்ளியிலேயே ELCOT-ன் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.