தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி! - சூரமங்கலம் மண்டலம்

Salem New bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சேலம் புது பேருந்து நிலையத்தில் ஆக்கிரம்பிப்பு கடைகள் அகற்றம்
சேலம் புது பேருந்து நிலையத்தில் ஆக்கிரம்பிப்பு கடைகள் அகற்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 8:27 PM IST

சேலம் புது பேருந்து நிலையத்தில் ஆக்கிரம்பிப்பு கடைகள் அகற்றம்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும், கர்நாடகம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளின் வசதிக்காக தேநீர் கடைகள், சிற்றுண்டி, பழக் கடைகள் என 56 கடைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால் கடை உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நடைபாதைகளை ஆக்கிரமித்து உணவுக் கடைகள், தேநீர் கடைகள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடைகள் என பல்வேறு விதமான கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்ததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் நடைபாதைகளில் சிலிண்டர் அடுப்புகள் வைத்து 24 மணி நேரமும் துரித உணவுகள் தயார் செய்து விற்பனை செய்தும் வந்தனர்.

இதனால் இரவு நேரங்களில் பேருந்துகளுக்காக பயணிகள் நடைபாதைகளில் காத்திருக்க முடியாமல் சாலையில் அமர்ந்திருக்க வேண்டிய அவலம் நீடித்து வந்தது. இது குறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 2 கட்டங்களாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. வியாபாரிகள் இதனை பொருட்படுத்தாமல், அரசியல் பிரமுகர்களின் பக்கபலத்தால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு போக்கு காட்டி வந்தனர்.

இந்த நிலையில், சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல உதவி ஆணையாளர் ஸ்டாலின்பாபு தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் துணையோடு இன்று(ஜன.30) நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். அப்போது வியாபாரிகள் சிலர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நடை பாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களையும் மாநகராட்சி வாகனத்தில் ஊழியர்கள் அள்ளிச்சென்றனர். மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்தால் சம்மந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வியாபாரிகள் மத்தியில் சலசலப்பு நீடித்தாலும், மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பேருந்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:பொறுப்பேற்ற உடனே அதிரடியில் இறங்கிய சேலம் ஆட்சியர்.. மலைவாழ் மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருள் வழங்க ஆணை!

ABOUT THE AUTHOR

...view details