தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் கோடை காலம்.. ஏற்காடு - கருமந்துறை பகுதிகளில் காட்டுத்தீ விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை! - கருமந்துறை

Forest Fire: ஏற்காடு, கருமந்துறை உள்ளிட்ட வனப் பகுதிகளில் தீ விபத்துக்கள் ஏற்படாத வகையில், வனத்துறையினருடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

safety measures taken to prevent fire accident in forest area
வனப் பகுதிகளில் தீ விபத்தைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 10:15 AM IST

சேலம்:கோடை காலங்களில் ஏற்காடு, கருமந்துறை உள்ளிட்ட வனப் பகுதிகளில் தீ விபத்துக்கள் ஏற்படாத வகையில், வனத்துறையினருடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (பிப்.15) சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கருமந்துறை, சேர்வராயன், பாலமலை, கஞ்சமலை, ஜருகுமலை, நகரமலை, சூரியமலை, பச்சமலை, கல்ராயன்மலை, கூடமலை மற்றும் பிற காப்புக்காடுகள் அமைந்துள்ள மலைப் பகுதிகளில், கோடை காலங்களில் காட்டுத்தீ ஏற்படாத வகையில் வனத்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள், ஊர் தலைவர்கள் ஆகியோருடன் சேர்ந்து, தீயணைப்புத்துறை சார்பாக தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வதுடன், ஏற்காடு, கருமந்துறை போன்ற மலைப் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்கக் கூடாது எனவும், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கருங்காளி, குரும்பப்பட்டி போன்ற கிராமங்களில் உள்ளவர்களிடம் காட்டுத்தீ விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிக் குழந்தைகளுக்கு தலைமை ஆசிரியர் மூலம் காட்டுத் தீ குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வனப்பகுதிகளில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, தீத்தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும், கோடை காலம் முடியும் வரை வனப்பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்காடு, கருமந்துறை ஆகிய இரண்டு மலைப் பகுதிகளிலும் தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்கள் உள்ளன. இத்தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்களான ஏற்காடு – 04281 222457 மற்றும் 94450 86386 மற்றும் கருமந்துறை – 04292 244803 மற்றும் 75503 96101 ஆகிய எண்களை பொதுமக்கள் எளிதாக அழைக்கும் வகையில், பொது இடங்களில் காட்சிப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காட்டுத்தீ தொடர்பான தகவல்களை 0427 2415097 மற்றும் 1800 599 0427 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோடை காலங்களில் அரசால் தெரிவிக்கப்படும் வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளை சுற்றுலாப் பயணிகள், வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பின்பற்றி வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:செயற்கை நுண்ணறிவால் மனிதர்களுக்கு வேலை இழப்பா? சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details