வேலூர்:முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 14 முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று (ஜூன் 5) திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
எஸ்.வி.சேகர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதன் பின்னர், எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்னுடைய நண்பர் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தேன். நல்ல முறையில் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். கடவுள் அருளால் அவர் மீண்டு நல்ல முறையில் வருவார்" என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "தமிழ்நாடு பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூஜ்ஜியம்தான் என்பது நிரூபணமாகியுள்ளது. ஒரு பந்தயத்தில் ஓடுகின்ற ஆறு குதிரைகளில் எந்த குதிரை வெற்றி பெறும், எந்த குதிரை நொண்டியடிக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும். அதேபோல, தமிழ்நாடு பாஜக என்ற குதிரை ஏற்கனவே கவிழ்ந்துவிட்டது.
தமிழக பாஜக என்று அண்ணாமலையின் யோசனையைக் கேட்டு அதிமுகவின் கூட்டணியை முறித்துக்கொண்டதோ, அன்றே தமிழக பாஜகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது. இரண்டு முறை இந்தியாவை ஆண்ட தேசிய கட்சிக்கு தன்னால் ஒரு சீட் கூட உபயோகம் இல்லாமல் மாநில தலைவர் உள்ளார் என்றால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
கலைஞர் 101வது பிறந்த நாள் பெரிய அளவில் கொண்டாடும் வகையில் முடிவுகள் வந்துள்ளது தேர்தலில் கூட்டணி கலையாமலும் சிந்தாமல், சிதறாமல் ஸ்டாலின் பார்த்துக்கொண்டார். 40 - 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெல்லக் காரணம் திட்டமிடலும், ஸ்டாலினின் உழைப்பும்தான்
பாஜக 14 சதவிகிதம் வாக்கு என்பது வளர்ச்சியில்லை, அசிங்கம். 13 இடங்களில் பாஜக டெபாசிட்டே இல்லை. 14 சதவிகிதம் என்பது பாஜக கூட்டணியால் வந்த வாக்குதான். சௌமியா அன்புமணி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதேபோல விஜயகாந்த் மகனும் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியைத் தழுவினார். அதுதான் நிஜமாகவே வெற்றிக் கோட்டிற்கு அருகில் உள்ளது" என்று அண்ணாமலையை கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க:“வரலாறு காணாத சீரழிவுகளும் நெருக்கடிகளும் முடிவுக்கு வரவுள்ளது” - திருப்பூர் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன்!