தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அண்ணா திமுகவை அமித்ஷா திமுகவாக மாற்றியவர் பழனிசாமி" - ஆர்.எஸ்.பாரதி பதிலடி! - RS Bharathi Vs Edappadi Palaniswami - RS BHARATHI VS EDAPPADI PALANISWAMI

R.S.Bharathi Statement against Edappadi Palaniswami: அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை என அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

EPS, RS Bharathi Photo
EPS and RS Bharathi Photo (Credit to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 10:50 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், குறிப்பாக விடியா திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தி.மு.க. நடத்துவது சொல்லாட்சியல்ல, செயலாட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது, பழனிசாமியின் அடிவயிற்றில் பற்றி எரிகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பழனிசாமி தமிழ்நாட்டுக்கு பொற்கால ஆட்சியைக் கொடுத்தது போல, தி.மு.க ஆட்சியை விமர்சித்திருக்கிறார். அவருக்கு பழையதை எல்லாம் சற்றே நினைவூட்ட விரும்புகிறேன்.

2016 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்ற நாள் 2016 மே 23. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த அந்த நாளைக் கொண்டாடாமல், இடையில் 2017 பிப்ரவரி 16ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான தினத்தைத்தான் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடினார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த தினத்தை மழுங்கடித்துவிட்டு, தனக்கு மகுடம் சூட்டிய நாளை புகழாரம் பாடி மகிழ்ந்த பழனிசாமிக்கு, தி.மு.கவின் 3 ஆண்டு ஆட்சியைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?

2017 பிப்ரவரி 16ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டில் பழனிசாமியை யாருக்குத் தெரியும்? ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கடைசி ஆளாக தூரத்தில் நின்று கொண்டிருந்த பழனிசாமி, ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் நாற்காலியிலேயே வந்து அமர்ந்துவிட்டு, ஜெயலலிதா பதவியேற்ற தினத்தையே மறைத்த புண்ணியவான் அல்லவா?

தர்மயுத்த காலத்தில், ‘யார் முதலமைச்சர் ஆகலாம்’ என்கிற சண்டையில் பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஆளுநர் மாளிகையை வட்டமடித்தபோது, சசிகலா அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்குமா என்ற அளவில் தான் பழனிசாமி பம்மிக் கிடந்தார். சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால், யாரை முதலமைச்சராக்கலாம் என சசிகலா யோசித்த போது பழனிசாமிக்கு அடித்தது ஜாக்பாட்.

ஆட்சியில் அமர்ந்ததும் பழனிசாமி ஜெயலலிதாவாக மாற நினைத்தார். அவரைப் போலவே சட்டமன்ற விதி 110-இன் கீழ் தினம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், ஒன்றும் செயலுக்கு வரவில்லை. ஜெயலலிதா எதிர்த்த உணவுப் பாதுகாப்பு, உதய் மின் திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் பழனிசாமி வலிந்து சென்று மோடி அரசை ஆதரித்தார்.

தன்னுடைய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்தளவுக்கு முடியுமோ. அந்தளவுக்குக் கீழிறங்கி மோடி அரசுக்குக் கூழைக்கும்பிடு போட்டு மாநில உரிமைகளை ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்தார். ஜெயலலிதாவாக மாற வேண்டும் என நினைத்த பழனிசாமிக்கு ஒருபோதும் துணிச்சல் மட்டும் வாய்க்கவே இல்லை. மோடி கொண்டு வந்த எல்லாச் சட்டங்களையும், திட்டங்களையும் கண்மூடிக்கொண்டு ஆதரித்து அண்ணா தி.மு.க-வை ‘அமித் ஷா தி.மு.க’ ஆக்கினார்.

கடந்த 3 ஆண்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது” என அறிக்கையில் பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார். பழனிசாமி வீட்டுக் கண்ணாடி பாவம் இல்லையா? அந்த கண்ணாடிக்குப் பின்னால் உள்ள பாதரசம் கதறுவது அவருடைய காதுகளுக்குக கேட்கவில்லையா?

  • தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 13 உயிர்களைப் பலி வாங்கி, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க வைத்தது யார் ஆட்சியில் நடந்தது?
  • பொள்ளாச்சியில் இளம் பெண்களைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளைச் செய்தவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்தானே.
  • மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் மறந்துவிட்டதா
  • தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயரதிகாரிகள் எனப் பலரும் லஞ்சம் வாங்கியது எல்லாம் பழனிசாமி சட்டையில் குத்தப்பட்ட மெடல்கள்தான்.

இவையெல்லாம் பழனிசாமி ஆட்சியில் இருந்த சட்டத்தின் மாட்சிமைகள்

  • உதவிப் பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது.
  • தேனி, குரங்கணி மலைப்பகுதிகளில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 17 பேர், காட்டுத் தீக்குப் பலி.
  • சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் லாக் அப் மரணங்கள்.
  • சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியது.
  • ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காகக் கோடிக்கணக்கான பணத்தைப் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலேயே சிக்கியது.
  • ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியது.

இப்படி முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை எல்லாம் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கி, மக்களைக் கடனாளிகளாக ஆக்கிவிட்டார்கள்” எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2011 – 2012 நிதியாண்டில் 1,02,439 கோடி ரூபாயாக இருந்த கடனை, பத்தாண்டில் 2020 – 2021-இல் 4,56,000 கோடியாக மாற்றியது எடப்பாடி பழனிசாமியின் சாதனை இல்லையா?

“கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை” எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. செய்தி சேனல்களையோ பத்திரிகைகளையோ பழனிசாமி படிப்பதில்லை என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் பழனிசாமி!

சேலம் மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 569 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சிவானிஸ்ரீ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று எச்.சி.எல். நிறுவனத்தில் பணிப் பயிற்சிக்குத் தேர்வாகியிருக்கிறார்.

“படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை. முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டைத் தொடலாம். நீங்கள் முயற்சிக்க மட்டும் செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன்'' எனச் சொல்லி முதலமைச்சர் கொண்டு வந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தால் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் இன்பா குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதெல்லாம் மு.க.ஸ்டாலின் ஆட்சி சாதனையின் மணிமகுடங்கள்.

இப்படி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட முடியுமா? பட்டியலிட என்ன சாதனைகள்தான் நடந்தது?எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாவட்டம் தோறும் பழனிசாமியின் புகழ்தான் பாடினார்கள். அந்த விழாக்களில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமியின் கட்அவுட்கள் தான் காலூன்றி நின்றன.

“தி.மு.க. ஆட்சி பயனற்ற ஆட்சி என்பதைத் தமிழக மக்கள் விரைவில் நிரூபிப்பார்கள்’’ என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் பழனிசாமி. பொறுத்திருங்கள் பழனிசாமி அவர்களே! ஜூன் 4ஆம் தேதிக்கு 27 நாட்கள் தான் உள்ளது. புதுச்சேரியையும் சேர்த்து நாற்பது தொகுதிகளிலும் உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அப்போது தெரியும் பயனற்றவர் யார் என்பது" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:“எம்ஜிஆருக்கு புரட்சித் தலைவர் பட்டம் ஏற்புடையதா?” - இயக்குநர் அமீர் கேள்வி! - Director Ameer About MGR

ABOUT THE AUTHOR

...view details