சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ''இந்த உத்தரவு அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி'' என கூறியுள்ளார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து அரசு முடிவு எடுக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, '' சென்னை உயர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் எடப்பாடி அறிக்கை விட்டுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறையில் டென்டர் கோரியதில் முறைகேடு நடைப்பெற்றதாக எடப்பாடி பழனிசாமி மீது திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை திமுக கோரவில்லை என்றாலும் ஆனால் உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
எடப்பாடி பழனிசாமியோ சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரினார். இதே எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மேல்முறையீடு போககூடாது என கூறுகிறார்.
திமுக எப்போதும் எந்த வழக்குக்கும் சிபிஐ விசாரணைக்கு கோரியது இல்லை. 570 கோடி கன்டெய்னரில் எடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டும், இதுவரை எந்த விசாரணையும் சிபிஐ செய்ததாக தெரியவில்லை. இதுவரை அந்த பணம் யாருக்கு சொந்தம் என சிபிஐ கூறவில்லை என்றார்.
இதையும் படிங்க:ஓசூர் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் பகீர் திருப்பம்... ஆனந்தின் மனைவியும் கைது..!