சென்னை:வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள், தங்கக் கட்டிகள், அரியவகை விலங்குகள் உள்ளிட்டவற்றை விமான மூலம் சென்னைக்கு கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற பொருட்களை பறிமுதல் செய்யும் விமான நிலைய அதிகாரிகள், கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்தநிலையில் சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தனர்.
அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி, தோகாவிலிருந்து வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயணியாக விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார். சந்தேகத்தின் பெயரில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.