கிருஷ்ணகிரி: ஓசூர் - பாகலூர் தேசிய நெடுஞ்சாலை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில், ஐடிபிஐ (IDBI) என்ற தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லதா நிலையில், ஏடிஎம்-மின் முன்பக்க ஷட்டர் நேற்று முழுவதும் மூடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாலையில் வழக்கம்போல் அதனை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர் சிவா, ஷட்டரை திறந்து பார்த்த போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவா, இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் விவேகானந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில், வங்கியின் மேலாளர் வந்து பார்த்த போது, ஏடிஎம் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், இது தொடர்பாக, வங்கி மேலாளர் ஹட்கோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையிலான போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன், விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும், அந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அதிகாலை நேரத்தில் வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து, ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங்கை வைத்து உடைத்து, அதிலிருந்து ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது பதிவாகியுள்ளது.