தமிழ்நாடு

tamil nadu

RGBSI நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீடு ஒப்பந்தம் கையெழுத்து! - M K Stalin in USA

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 7:52 AM IST

RGBSI நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீட்டில், ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

RGBSI, MK Stalin - file Image
RGBSI, MK Stalin - file Image (Credits - RGBSI, MK Stalin x page)

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 12.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், RGBSI நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்த்து, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. சீரான மற்றும் பரவலான வளர்ச்சி என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து வருவதன் காரணமாக உயர்கல்வியில் மொத்த சேர்க்கையில் நாட்டிலேயே அதிகபட்ச விகிதத்தை அடைந்தும், பன்முகத்திறன் கொண்ட சிறப்பான மனிதவளத்தை உருவாக்கியும், நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி தளமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

முதலீடுகளைப் பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை மேலும் வலுவடையச் செய்திடவும், 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து, அதை அடைய பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: தமிழக முதல்வர் அமெரிக்க பயணத்தில் இதுவரை மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. முழு விவரம் இதோ!

ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அதேபோல அதிக அளவில் வேலைவாய்ப்பினை வழங்கக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் மூலதன தீவிர துறைகளிலும் சமச்சீரான முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 17 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,516 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று (செப்.12) சிகாகோவில், RGBSI நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, RGBSI (Rapid Global Business Solutions, Inc.) நிறுவனம், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை, பொறியியல், தரமான வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளையும், பல துறைகளுக்கான மேம்பட்ட மின்னணு மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளையும் வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமெரிக்க நாட்டின், மிக்சிகனில் உள்ள ட்ராயில் அமைந்துள்ளது. RGBSI நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் RGBSI நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், RGBSI நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் நானுவா சிங், தலைவர் மற்றும் முதன்மை அலுவலர் ரவிக்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும், இந்நிகழ்வின்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details