திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் தென் திருப்புவனத்தைச் சேர்ந்த ரவுடி பேச்சித்துரை மற்றும் அவரது கூட்டாளியான சந்துரு இருவரும் சேர்ந்து கடந்த 7-ஆம் தேதி மது மற்றும் கஞ்சா போதையில் கையில் அரிவாளுடன் வீரவநல்லூர் பகுதியில் வலம் வந்ததோடு கண்ணில் பட்டவர்கள் எல்லோரிடமும் தகராறில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.
மேலும், வீரவநல்லூர் அருகே வெள்ளாளன்குளி பகுதியில் சாலையில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர் என்றும், இதன் பிறகு திருப்பிடைமருதூர் பகுதிக்குச் சென்று அரசுப் பேருந்து ஒன்றைச் சேதப்படுத்தி அதன் ஓட்டுநரை வெட்ட முயற்சி செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செந்தில்குமார் என்ற காவலர் இருவரையும் பிடிக்க முற்பட்டபோது காவலர் செந்தில்குமாரையும் அரிவாளால் கையில் வெட்டி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதற்கு இடையில், அருகே உள்ள தோட்டத்தில் ரவுடி பேச்சித்துரை மற்றும் அவரது கூட்டாளி சந்துரு ஆகிய இருவரும் பதுங்கி இருந்துள்ளனர்.
இதனை அடுத்து, இருவரையும் போலீசார் பிடிக்கச் சென்றபோது போலீசாரை மீண்டும் அவர்கள் தாக்க முற்பட்டதால் போலீசார் துப்பாக்கியால் ரவுடி பேச்சித்துரையின் கால் மூட்டுக்குக் கீழ் சுட்டுப் பிடித்தனர். மேலும், தப்பி ஓடிய சந்துருவையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்ட காவலர் செந்தில்குமார் மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்ட ரவுடி பேச்சித்துரை இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரவுடி பேச்சித்துரை இன்று (மார்ச் 11) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து, விசாரணைக் கைதி உயிரிழந்ததாக போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், உயிரிழந்த ரவுடி பேச்சிதுரையின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேரன்மகாதேவி நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் பிணவறையில் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதற்கு இடையில், உயிரிழந்த ரவுடி பேச்சித்துரையின் ஒரு கால் சிகிச்சையின் போது வெட்டி எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குண்டாஸ் முடிந்து வெளிவந்தவர் தொடர் வழிப்பறி.. போலீசார் சுற்றி வளைத்தது எப்படி?