கரூர்:தமிழக தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையின் நிறுவனத் தலைவர் ராமர் பாண்டி, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு திரும்பிய போது, அரவக்குறிச்சி பைபாஸில் காலை 11:30 மணியளவில், தேரப்பாடி பிரிவு அருகே பொலிரோ காரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உடற்கூறு ஆய்விற்காக அவரது உடல், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் பல்வேறு தேவேந்திரகுல வேளாளர் அமைப்பினைச் சேர்ந்தோர், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், உடற்கூறு ஆய்வினை மேற்கொள்வதற்கு கையொப்பம் இட மறுத்து, பிப்ரவரி 19ஆம் தேதி இரவு முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (பிப்.20) மதியம் 1 மணி அளவில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பிரபாகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும், கொலை சம்பவத்திற்கு தூண்டுகோலாக அமைந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் உள்ளிட்டவர்களை வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும், அவர்களை தீண்டாமை, வன்கொடுமை சட்ட வழக்கில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்று மாலை 4 மணியளவில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் அமர்ந்து, சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவ்வாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் மற்றும் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கரூர் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து, கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்யும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூறி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றி, கரூர் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:ஆருத்ரா நிறுவன இயக்குநர் ரூசோவின் ஜாமீன் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!