தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவுடியை முகம் சிதைத்து கொன்ற கும்பல்... சேலத்தில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!

சேலத்தில் பீரோ பட்டறை சரவணன் என்கிற ரவுடியை பட்டப்பகலில் ஒரு கும்பல் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீரோ பட்டறை சரவணன் கொலை
பீரோ பட்டறை சரவணன் கொலை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சேலம்: மாவட்டம், அயோத்தியாபட்டணம் அடுத்த, வலசையூர் அருகே உள்ள வெள்ளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற பீரோ பட்டறை சரவணன். இவருக்கு வயது 46. சரவணனுக்கு வனிதா (40) என்ற மனைவி உள்ளார். வெள்ளாள குண்டம் பகுதியில் பீரோ பட்டறை நடத்தி வந்த சரவணன் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் அப்பகுதியில் உள்ள ரௌடி கும்பலுடனும் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு கணவனும், மனைவியும் வெள்ளாள குண்டத்தில் உள்ள பட்டறையில் தங்கிவிட்டு இன்று காலை தங்களின் சரக்கு ஆட்டோவில் வெள்ளியம்பட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டில் இருந்து வெள்ளாள குண்டம் பீரோப் பட்டறைக்கு, செல்ல அரூர் மெயின் ரோடு, பனங்காடு பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க:போதைப் பொருள் விற்பனை; பெண் உள்பட 5 பேர் கைது!

அப்போது, இவர்களின் வாகனத்திற்கு பின்னால் சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் சரக்கு ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல், ஆட்டோவில் இருந்த பட்டறை சரவணனை சாலையில் இழுத்து போட்டு, முகத்தை சிதைத்து, சரமாரியாக வெட்டிவிட்டு சென்றது. அதில், படுகாயமடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையை அடுத்து மேட்டுப்பட்டி, சுக்கம்பட்டி, வெள்ளாள குண்டம் ஆகிய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்த் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆனந்த் கொலை வழக்கில் சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, காட்டூர் ஆனந்தனின் கூட்டாளிகள் இந்த கொலையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

பட்ட பகலில் ரவுடி கும்பலால் பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details