திருச்சி:திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த உமாதேவி தாக்கல் செய்த மனுவில், “திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி (42). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் யூக்கலிப்டஸ் காட்டுப் பகுதியில் துரை பதுங்கி இருந்த போது அவரை கைது செய்ய சென்ற காவலர்களுக்கும், துரைசாமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் துரைசாமியை ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் என்கவுன்டரில்சுட்டுக் கொன்றார்.பின் அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் துரைசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த என்கவுண்டர் செய்த வழக்கை தொடக்கத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தான் விசாரிக்க வேண்டும். ஆனால், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார், என உத்தரவு வெளியிடப்பட்டு விசாரணை நடக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும்”என மனுவில் கூறியிருந்தார்.